30.6.10

காதல் வேள்வி


உலர்ந்த உதடொற்றி
மெளனக்குமிழிகளுடைத்து
வானவில் வளைக்கவா ?

ஆய்வுக்குடுவையொத்த
இடுங்கிய ஒக்கலையில்
நாடாத்தழும்புகளுக்கு
செங்காற்றாழை சோறிடவா?

வெட்டிய உகிர்களின்
பிறைநிலாக்களை சேகரித்து
ஆகர்ஷண அட்சரம்
ஜபிக்கவா ?

உயிரெனும் விதைப்பையில்
காதலென்னும் விருட்சம் வளர்க்கவா?

காலடித்துகள்களை
மணற்குடுவையிலூற்றி
உயிர் மரிக்கும் நேரம் குறிக்கவா ?




25.6.10

உரையாடல் கவிதை போட்டி விருதுகள்

உரையாடல் கவிதைபோட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறத்தக்க கவிதைகளை எழுதிய எனது நண்பர்களுக்கான பிரத்யேக விருது.




விருது பெறுபவர்கள் 


நேசமித்திரன் 
தேனம்மை லக்ஷ்மணன் 
கமலேஷ் 
சிவாஜி சங்கர் 
பாலா 
காயத்ரி 
ராமலக்ஷ்மி 
ஹேமா 
சத்ரியன் 
சந்தான சங்கர் 
தமிழரசி 


23.6.10

கந்தர்வம்


ஏழாம்  வீட்டில்
குரு இருப்பதால்
திருமணமே ஆகாதென்ற
சோதிடரிடம்
எட்டாம் வீட்டு ரமேஷுடன்
ஓடிப்போகவிருப்பதை
எப்படி சொல்வேன் நான் .................


21.6.10

கவிதை

கவிதையும் காக்கையும் 
கிழிந்த கீற்று 
குளிர்ந்த கூடு 
கெழவனும் கேள்வியும் 
கைதி 
கொளவியும் கோலமும் 
கெளதாரியும்

20.6.10

வரங்கள்





சூரியக்கதவு திறந்தபின்னும் 
துய்க்கும் தூக்கம் 


நிலவயர்ந்த நிசியிலும் 
நீளும் விழிப்பு 


சித்திரை மாதத்தில்
பத்தரை செமீ மழை 


பூசணிப்பூ மாத
ஓசோன் காலை 


புலன் நடுங்கும் 
பனிப்புல்லமர்ந்து
பச்சை தேநீர் 


முனகாத கழிவறை 


முந்தாத உச்சம் 


சில்டனபில் தேடாத பள்ளியறை 


தமிழன் சாகாத துப்பாக்கி 


சிலிக்கான் திருடும் 
எஸ்கவேட்டர் மூழ்குமளவு 
பொன்னி வெள்ளம்


கூட்டமில்லா கோவில் 


சுணங்காத புரோஸ்டேட்


கோலிலா முதுமை 


தோற்கும் காதல் 


நரைக்காத காமம் 


கனவிலாவது 
கடனில்லா வாழ்க்கை 


மறுகன்னம் காட்டும் நட்பு 


உயிர் உறையுமிசை 


கருமண் காடும் 
திமிலுள்ள பசுவும் 

12.6.10

நரம்


மதவாதிகள்
அறிவு சீப்பை ஒளித்து
சிந்தனையற்ற சிகைதனில் சிடுக்கெடுப்பீர்

மருத்துவர்
வைரல் சுரத்திற்கு
ஆண்ட்டிபயாடிக் அளிப்பீர்

அரசியல்வாதிகள்
எங்கள் வாக்கில் பற்றுவைத்து
உங்கள வங்கிக்கணக்கில் வரவு வைப்பீர்

அறிவியல்வாதிகள்
அண்டம் பிளக்குமறிவால்
பிண்டம் பிடிக்க முயல்வீர்

முதலாளிகள்
குளிர்வறையிலிருந்து
ஏழையின் வியர்வையை
எத்தனை லிட்டரென
அளந்து பார்ப்பீர்

சுயநலவாதிகள்
எரிக்கப்பட்ட எலும்புச்சாம்பலில்
சலித்து தங்கம் தேடுவீர்

ஒருநாளேனும்
புனிதராயல்ல
மனிதராவேனும்
மாறிப்பாருங்கள்.......

8.6.10

முத்துக்குளித்த வைரம்



செயற்கை ஓய்ஸ்டருலகிலுதித்த
இயற்கை முத்து

கரித்த கார்பன் பூமியில்
உயிர்த்த ஜாகர் வைரம்


தத்தகாரத்தில் 
தனி 'ழ'கரம் படைத்தவன் நீ
 

என் நிலவில் தெரியும் வானம் நீ
மூளையின் முதல் (க)விதை நீ

காற்று கிழிபட நடக்கவும்
சிங்கப்பாலை தங்ககிண்ணத்தில் வைக்கவும்
பெருமுடா முக்கோண சூட்சுமமும்
தெளிய வைத்தவன் நீ

ஊனுருக்கும் உன்னத மொழி
தேனூற்ற, தீருமென் பேரிச்சை

உன்கவித்திறம்
எங்ஙனம் சாத்தியம்?
யோசிக்குமென்மனம்

சந்திரன் மனோகாரகன்
சுக்கிரன் கலாகாரகன்

இவ்விருவரும் சேர்ந்த பெயராலா ?

வெண்ணுடையுடுத்தி
வெண்பா படைப்பதாலா ?

முறுக்கிய  வானம் நோக்கும்
மீசை கவிதை ரீசீவரா ?

இல்லை


புறத்தோற்றம் புனைவுகளே
அகத்தினுளிருக்கும் அறிவுச்சட்டையென
ஆகத்தெளிந்தேன்.

காமக்களிப்பை
காசீந்து பெறலாம்

கவிக்களிப்பை ?

வாய்ப்பில்லை

அது குண்டலினி குலுக்கி
மூலாதாரம் முத்தமிடும்
ஆன்ம ஸ்பரிஸம்

எழில் கவிதைகளுடன்
தெரிக்கும் உனதுச்சரிப்பை
எங்கோ ஒரு மூலையில்
தமிழ்த்தாய் ஆனந்த நீர் சொரிய
ராம காதை கேட்ட அனுமனாய்..............