23.12.11

சோறுவாய்




இறைக்கப்பட்ட அரிசிக்கு 
சுரைக்காய் விதை தெளித்த 
தவக்கட்டான் குருவி


வீதியில் கொட்டிய 
பழைய சோற்றுக்கு 
நாள் முழுதும் காவல் 
காக்கும் தெருநாய் 


பிண்ட உணவுக்கு 
ஆத்மா விசாரம் 
செய்யும் காகம் 


மண்ணை அகழ்ந்து 
மட்குரமாக்கும் 
மண்புழு 


இன்று காலை செய்த
உதவியை 
மதியமே மறக்கும் 
ஆறறறிவு மத்தியில் 


ஐந்தறிவினங்கள்
செஞ்சோற்று கடனை
எப்பொழுதும் 
மறப்பதே இல்லை ...............



13.11.11

லிகிதம்





மையில் துளிர்க்கும் 
ஒவ்வொரு எழுத்தும் 
மனதணுக்களின் சாரம் 


சிறுவயதில் பழகிய 
அகர உகரங்கள் 
சற்று கோணலாகவே இருந்தது 


விடுமுறை விண்ணப்பங்கள்  
மகிழ்வின் வடிவாகவே இருந்தது


தந்தைக்கு எழுதிய 
கடிதங்களில் 
எழுத்துகள் சற்று 
குனிந்தே இருக்கும் 


காதலிக்கு எழுத 
ஆரம்பித்த போது 
புள்ளிகளில் இதயம் தெரியும் 


வேலைக்கு விண்ணப்பித்தபோது 
பணிவாய் இடைவெளி 
நிரப்பியது 
குடும்ப பொறுப்பு 


ஆனால்


அம்மா உனக்கெழுதும்போது
மட்டும் 
எழுத்துகள் கலங்கி 
கரைந்தே போகிறது ....................

31.10.11

திறக்காத கதவுகள்


அய்யர் பங்களாவுக்கு 
காஞ்சிபுரத்திலிருந்து
குடி வந்தது ஒரு குடும்பம்

வந்த நாள் முதல் 
கதவுகளும் ஜன்னல்களும் 
மூடப்பட்டே இருந்தன

எதிர்வீட்டு பையன் பாபு 
சைக்கிளில் விழுந்து 
காலுடைந்தபோதும் 

கடைசி வீடு 
மாரி வாத்தியார் 
மாரடைப்பால் 
போன போதும் 

கூரை வீட்டு லட்சுமி 
பனிக்குடமுடைந்து
தலைப்பிரசவத்திற்கு 
ஓலமிட்ட போதும் 

கதவுகளும் ஜன்னல்களும் 
மூடியே இருந்தன

அந்த வீட்டு கிழவி 
செத்தபோது மட்டும் 
தெருவே அங்கு போய் 
ஓவென 
அழுதுவிட்டு வந்தது...............  

23.9.11

சில ஹைக்கூக்கள்


தெளிந்த வானில் 
நகரும் நட்ச்சத்திரம்
பண ராசி

எலக்ட்ரானிக் ஓட்டு
இயந்திரத்தில்
கைநாட்டிய வேட்பாளர்

சிறுமியின் கிழிந்த 
சட்டையில் தெரிகிறது 
யாரோ துணையென்று குத்திய பச்சை 

காதலின் காயங்கள் 
கவிதை வழியாக
மருந்திட்டு கொல்கிறது

இரவில் கழிகிறது 
உச்ச தவங்களும்
மிச்ச காமங்களும்  

1.9.11

கடவுளிலிருந்து


காமம் விற்க 
கடை விரிக்கப்பட்டது 
அலங்கார தோரணங்கள் கட்டி 
ஒலிபெருக்கி அலற 
இளையவர் முதல் 
முதியவர் வரை 
அலைமோதிய கூட்டத்தில் 
வரிசையின் 
முதல் ஆளாக 
கடவுள் 
நின்றுகொண்டிருந்தார் .........

15.8.11

பயணம்



மிச்ச சில்லறை தேடி 
நடத்துனர் முதுகை சுற்றும் 
பார்வைகள்

சித்திரை வெயிலில் 
தோள் சாயும்
சதாபிஷேக பெரியவர் 

பெருமஞ்சள் முடிச்சுடன் 
யாருக்கும் கேட்காமல் பேசி வரும்
முன்னிருக்கை புதுமண ஜோடி

சீரியல் பார்த்து 
சிரிப்பை மறந்த 
மாமியார் மருமகள் 

ங்கோ ஒரு மூலையில் 
ஒலித்து கரையும் 
"ராமன் ஆண்டாலும்"

ரொம்ப நாளாகிவிட்டது 

ராணுவ ஒழுங்குடன்  
குளிர் காற்றோடு 
பயணிக்கும் சொகுசு கார் 
பிரயாணங்கள் இப்பொழுதெல்லாம் 
சுகிப்பதே இல்லை..................................... 

  

28.7.11

கடவுளின் பிரதி


போதுமென்று 
சொன்ன பிறகும் 
இன்னொரு இட்லி வைக்கும்
அம்மாவின் பரிமாறலிலும்

ண்டியில் பாத்து போப்பாவெனும்
அப்பாவின் குரலிலும் 

டிந்தபின் கசியும் 
மனைவியின் விழியோர நீரிலும்

தூக்கத்தில் சிரிக்கும் 
குழந்தையின் முகத்திலும் 

டவுளை பல ரூபங்களில் 
கண்டு கொண்டே இருக்கிறேன் ....... 

25.7.11

யதார்த்த கவிதைகள்



1.உறுத்தல் 
களைகட்டிய 
கல்யாணவீட்டில் 
சிரிக்க முடியாமல் 
வீடு வரும்வரை
உறுத்திக்கொண்டே 
இருந்தது 
பக்கத்து வீட்டில் 
கெஞ்சி வாங்கிய 
முறுக்கு சங்கிலி  


2.அடமானம் 
பிராவிடன்ட் பணம் 
பர்னிச்சர் சந்தா
நகை சீட்டு 
எவனிடமோ 
அடகு போக 
தயாராகிறது
பெண்ணுடன்  
பெண்ணை பெற்றவர்களின்
சேமிப்பும் 


3.மணற்குடுவை 
சமவயதுள்ள
வயோதிகர்களின் 
ஆபிச்சுவரி 
பார்க்கையில்
எங்கோ
உடலில் 
கவுன்ட் டவுன் 
கேட்கிறது 

4.ஓம் 
தெருவிழாக்களில் 
அசிலி பிசிலிகளின்
இரைச்சலில் 
மறைந்து கரைகிறது
ஓம்கார நாதம்



5.உயில் 
உயிலென்பது  
கொடும் பிள்ளைகளின் 
பேராசை மையினால் 
எழுதப்படும் 
மரண முன் அறிவிப்பு 
பத்திரம்




20.7.11

கலவித்தொகை 18 +++



தலைவி : கலவி ஐயம் களைக தலைவா !!!!!


தலைவன் : கலவிப்பரீட்சையில் உன் உடம்பெனும் 

கேள்வித்தாளில் என் உயிரெனும் பதிலை எழுதுவேன்


தலைவி : கூடா நாட்கள் ?


தலைவன் : முழுமதி நாளும் நிலவற்ற இரவும், 

சாண நீரில் கழுக்காணி  நிற்கும் தருணமும்


தலைவி : கூடும் நேரம் ?


தலைவன் : காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ்சி யாமமும் விடியலுமென்றிப் 
பொழுதிடை தெரியிற் பொய்யே 
காமமென்கிறது குறுந்தொகை


தலைவி : கலவியின் முதற்படி

தலைவன் : முதற்படி முதல் கடை வரை 

சொல்கிறேன், கேளடி

அகநகைப்பாய் பேசியது  கடுநகையாய் மாற  

கரங்கள் தழுவி சிரமோர்ந்து
உச்சந்தலையில் முத்தமிடுவேன்
பொய்யாய் எனை விலக்கி
மெய்யுடன் அணைப்பாய்
இறுக்கி இதழில் முத்தமிட்டு 
நாவால் மேலண்ணம் துழாவி
காற்று புகா கவசமாவேன் 


மெல்லத் துகிலுரிந்து 
நகில் மீதுலவுவேன்
சிலீமுகம் உள்ளிழுத்து 

மகவுக்கு பால் சுரக்க 
ஆயத்தம் செய்வேன் 


உகிர்களால் குறியிட்டு 
பூரித்த கொங்கையில் 
பற்குறியிடுவேன்


உந்தியில் வட்டமிட்டு 
கடுவன் ரோம வயிற்றில் 
அதரத்தால் உலாவுவேன் 


கீழிறங்கி கிறங்கி 
புற்றரவு கடிதடம் பற்றி 
கந்து முனை சுவைத்து 
நாவால் அணைப்பேன் 
காமத்தீயினை 


உன்னுச்சம் முன்னென்பேன்
என்னுச்சம் பின்னென்பேன்


பிளந்த நிதம்பத்தில் 
லிங்கம் செலுத்தி 
இடைநிலை மெய்ம்மயக்கம் 
பெறுவோம் ....................................


 




17.7.11

சும்பி





இதழ்களென்பது.......


நரம்புகளை முறுக்கேற்றி 
காம சங்கீதமிசைக்கும்
அற்புத வாத்தியம்


ஒற்றி எடுக்க எடுக்க 
உலராத 
அதிசய சுரபி 


இடப்படுமிடத்தில்
தடங்கள் வேறானாலும் 
வேர்களசைக்கும்
வினோத விழுதுகள் 


சப்த மாத்திரைகளின் 
வேறுபட்ட ஒலிகளில் 
உயிர்க்கூடசையும் 
உன்மத்த வித்தை 

விழி செருகி 

தலை சாய 
பரிமாறும் முத்தங்கள்
குறிசேரா

சைவக்கலவி 


யாருக்கோ 
இடப்படாத 
முத்தமொன்று 
உறைந்தே கிடக்கிறது 
ஒவ்வொருவரின் 
உதடுகளிலும் ................

14.7.11

சாயும் நாற்காலி



98ல் வாங்கிய கணிணி
பரணில் தூங்க 
மடிக்கணினி 
அலங்கார மேசையில் 


நேஷனல் டேப் ரெகார்டர் 
ஒட்டடை படிய 
ஐ பாட் அலறுகிறது 


லேண்ட்லைன் ஒலித்து
பல நாளான பொழுதும் 
பிளாக்பெர்ரி அழைக்கிறது 


பழையதுகளை ஒதுக்கியே 
வாழ்கிறது இளையதுகள் 


ஈசி சேரில் அறையின் 
மூலையில் நான்
என்னை நிரப்புபவன் 
யாரோ ? 
   

26.6.11

குட்டிக்கவிதைகள்




எல்லை 

தெருவோரம்
சிறுநீர் கழித்து 
எல்லையறிகிறார்கள்
மாக்கள் 



சாம்பல் 

ஆஷ்ட்ரே 
நிரப்புகிறது 
காதல் 
சாம்பல் 


23.6.11

தனித்திரு



கவிதைஎழுத 
கருப்பொருள் தேடினேன் 

உருவாக்கிய எந்தை

கருவாக்கிய யாய்

திருவாகிய இறை   

தருவுறை வன்னி 

கிட்டவில்லையெதுவும்

உன் மணவாழ்விற்கு   
எருவாகிய எனது காதல்

கொட்டியது 
கண்களில் 
கவிதைகள் 
துளித்துளியாய் .........   

7.6.11

நாணயம்



கோயில் வாசல் 
பார்வையற்றோனின் 
கிழிசல் துண்டில் 
புண்ணியம் தேடும் 
பொய் முகங்கள் 
சிதறிக்கிடக்கின்றன 
நாணயமற்று........

27.5.11

மறுதலி



சூரியன் தன்னிருக்கையை 
நிலவுக்கு தந்த பொழுது 

திவலைகள் தெறித்த வானில் 
விப்கியார் வண்ணம் 

நனைந்த தலையை 
துவட்டி கொண்ட மரங்கள் 

கருத்த மேகங்களின் 
கவன ஈர்ப்பு மாநாடு 

பூக்களின் இதழ்களில் 
முத்து முத்தங்கள் 

இனிமையான 

ஈரமான 

இருமுட்கள் பிரிந்த 
அந்தி நேரத்தில் தான் 

சொன்னாய் 

என்னை பிடிக்கவில்லையென


11.5.11

(ய)(ம)(த)ந்த்ரம்



ஓம் சிம்மி சிம்மி ஸ்வாஹா 
சர்வஜன வசியம் 

அனிமா சித்தி தரும் 
ஏகமுகி ருத்ராக்ஷம் 

ஓஜஸ் வளர்க்கும்
வஜ்ரொலி முத்ரா

கண்ணூறு அழிக்கும் 
காக்ரிசிங்கி தாயத்து 

சிவனார் அருளிய 
யோனி தந்த்ர ரகசியம் 

குலார்ணவ அரசியல்வாதிகளின் 
வாமச தந்திரங்கள் 

பிராணப்ரதிஷ்ட யந்திரங்களும்
ஏரொளிச்சக்கரமருளிய திருமந்திரமும் 

எத்தனை இருப்பினும் 
எவ்வுயிரும் உய்ய 
தாய் எனும் 
ஈரட்சர மகா 
மந்த்ரம். 




   

24.4.11

காதல் திரிவு



கவிஞனாக்கும் 

கண்ணீர் வற்றும் 

கருப்பு போர்வை 
முகத்தை மூடும் 

கிழிந்த சட்டை 
அணிய பிடிக்கும் 

நிலா நினைவுகளை 
உடைந்த நட்சத்திரங்களாய் 
எண்ணப்பிடிக்கும் 

கூதிர் காலத்தில்
உடல் தீயாய் கொதிக்கும் 

எவ்வொலி காதில் 
கேட்பினும் 
அது உன்பெயராய்
ஒலிக்கும் 

எப்பெண்ணை பார்க்கினும் 
உன் கழுத்து மச்சம் தேடும் 

உன் தெற்றுப்பல்லில் 
சிக்கிய என் இதயம் 
விதியென்னும் கோரப்பற்களில் 
சிதையுண்டது 

தலையணை நனைய 
உப்புக்கரிக்கும் கனவுகளில்
சேர்ந்தே வாழ்கிறோம் 

உயிரற்ற உடலாய்
காதல் பிரசவத்தில்
மரித்து பிறந்த 
நீலக்குழந்தை 
நான் .............

17.3.11

ஒருமுறை



ஒருமுறை பார்

என் கருவிழிதனில்

நட்சத்திரம் அறி


ஒரு சொல் பகர்

உன் பெயருக்கெழுதும்

என் உயிரின் உயிலை வாசி


ஒருமுறை சிரி

என் சிரசின் பின்

ஒளிவட்டம் காண்


ஒருமுறை அணை

எழும்பு மஜ்ஜையில்

புது அணுக்களின்

உற்பத்தி உணர்


ஒருமுறை முத்தமிடு 

உயிர் பூக்கும்

உன்னத ஓசை கேள்


ஒருமுறை திற 

இதயக்கதவினுள்

நுழைந்து மூடி

மறைந்தே வாழ்வேன் ...........................

22.2.11

காக்ளியாவற்ற கருணம்



நான்கு வழிச்சாலையில் 
பயணித்தேன் 

சில ஊர்கள் 
மறைந்தே போயின 

ஓர தேநீர் கடைகளின் 
சுவடுகள் இல்லை 

வீடுகளின் முதல் மாடி
தரைத்தளமாய்

காடுகளின் தடங்கள்
கரைந்திருந்தது  

பயணம் என்னவோ 
சுகமாய்த்தான்  இருந்தது 

குடிசையிழந்தோரின்
கூக்குரல் மட்டும் கேட்கவே இல்லை 
காக்ளியாவற்ற கருணத்தால்.............


26.1.11

இகபரம்



பிறப்பின் ரகசியம் 
தேடி 
பெருவெளியினுள்
பிரவேசித்தேன் 

அனுஜன்ம அரசனோ 
த்ரிஜென்ம சேவகனோ 
பகுத்துணர முடியவில்லை 

சிறகு முளைத்திறக்கும் 
பரிதாப ஈசலோ 


புல் குடும்ப 
தென்னையோ 


விடம் கொண்ட 
ஈரமில்லா அரவமோ 


பிறவி பெருங்கடலின் 
ஆழம் அறியப்படவில்லை 

திடுக்கிட்டு விழித்தபோது 
பெல்லோபியன் குழல்வழியோடி
ஓட்டத்தில் வென்ற 
கோடியில் ஒருவனென்பது
மட்டும் புரிந்தது.............. 


டிஸ்கி : 27.01.2011 இன்று எனது பிறந்தநாள். 
வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி.



8.1.11

தட்டான்



விராட் பிறங்கடை
அபிவாதனம் 


கழஞ்சு தண்டவாணி 
தாமிரக்குன்றிமணி 
குழைந்துருக்கிய 
மங்கல நாண்


அயத்தின் களங்கு
நீக்கி 
தணலில் தட்டிய 
கொழு


உளி துளைத்து 
துயில் திளைக்க 
தேக்கு சேக்கை


மாந்தக்கோட்டத்தின்
காந்தக்கோட்டை


யாழியின் அண்ணத்தில்
உருளும் கல் 


துரியோதனன் வழுக்கிய 
இந்திர பிரஸ்தம் 


ஆண்டவர்களின் 
ஆயுத கர்த்தாக்கள் 


பெருந்தனக்காரர்களின் 
பிரதேச பிரவேசம்


மயில் துத்தம் 
தீர்த்தமாய் 
மரித்த உயிர்கள் 


காட்மிய புகையில்
நுரையீரல் அரிப்புகள் 
கந்தாரச்சுவையில் 
உப்பிய கணயங்கள்


ஆறறிவு மிஞ்சிய 
அரும்பெரிய சந்ததி 
அடிமை அமீபாவாய் 
ஒடுங்கியது கண்டு 


குஞ்சர மல்லனின் 
பிரமேந்திரக்கல்லில் 
வெந்துளி  கசிகிறது 
கமலாலய தச்சனின் 
ஆரூர்க்குள  நீராய்