8.6.12

பகல் இரவு



காரிருள் மறைக்கும் நிலவிரவு 


வீசும் காற்றில் கொடியின் 
முந்தானை விலக்கும் கிளைகள் 


அரவமற்ற சாலையில் 
ஆண் நாயின் ஊளை


மின்கம்பியிலமர்ந்த 
கோட்டானின் கொக்கரிப்பு 


பறக்கும் விண்மீனாய் 
மின்மினிகள் 


எங்கோ ஒரு ஈர முனகலும்
ஏக்க பெருமூச்சும் 


நள்ளிரவு நளினங்களை 
துயிலாமல்  ரசித்தேன் 


புலர் பொழுது சூரியனும்


பால்காரனின் மிதிவண்டி மணியும் 


பேப்பர் பையனின் "சார்"  


காய்கறிக்காரியின் "மாங்காய்" 


எதுவும் என்னுள் நுழையாதபடி 


சுகித்துறங்கினேன்


நள்ளிரவின் எச்சங்களை 
சுமந்தபடி........................

26.1.12

சில ஹைகூக்கள் - 1



பட்டாம் பூச்சிகள் 
பள்ளி செல்கின்றன 
சிறகுகள் உதிர்க்க 

உண்டியலில் 
சேர்கிறது
அனுபவியா ஆசைகள் 

பாலுக்கேங்கும் குழந்தையின் 
நாவை நனைக்கும் 
தாயின் கண்ணீர்


பி. கு : எனது பிறந்தநாளான (27.01.2012) இன்று வாழ்த்திய, வாழ்த்திக்கொண்டிருக்கிற, வாழ்த்தப்போகின்ற அனைத்து அன்பு சொந்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.  

23.12.11

சோறுவாய்




இறைக்கப்பட்ட அரிசிக்கு 
சுரைக்காய் விதை தெளித்த 
தவக்கட்டான் குருவி


வீதியில் கொட்டிய 
பழைய சோற்றுக்கு 
நாள் முழுதும் காவல் 
காக்கும் தெருநாய் 


பிண்ட உணவுக்கு 
ஆத்மா விசாரம் 
செய்யும் காகம் 


மண்ணை அகழ்ந்து 
மட்குரமாக்கும் 
மண்புழு 


இன்று காலை செய்த
உதவியை 
மதியமே மறக்கும் 
ஆறறறிவு மத்தியில் 


ஐந்தறிவினங்கள்
செஞ்சோற்று கடனை
எப்பொழுதும் 
மறப்பதே இல்லை ...............



13.11.11

லிகிதம்





மையில் துளிர்க்கும் 
ஒவ்வொரு எழுத்தும் 
மனதணுக்களின் சாரம் 


சிறுவயதில் பழகிய 
அகர உகரங்கள் 
சற்று கோணலாகவே இருந்தது 


விடுமுறை விண்ணப்பங்கள்  
மகிழ்வின் வடிவாகவே இருந்தது


தந்தைக்கு எழுதிய 
கடிதங்களில் 
எழுத்துகள் சற்று 
குனிந்தே இருக்கும் 


காதலிக்கு எழுத 
ஆரம்பித்த போது 
புள்ளிகளில் இதயம் தெரியும் 


வேலைக்கு விண்ணப்பித்தபோது 
பணிவாய் இடைவெளி 
நிரப்பியது 
குடும்ப பொறுப்பு 


ஆனால்


அம்மா உனக்கெழுதும்போது
மட்டும் 
எழுத்துகள் கலங்கி 
கரைந்தே போகிறது ....................

31.10.11

திறக்காத கதவுகள்


அய்யர் பங்களாவுக்கு 
காஞ்சிபுரத்திலிருந்து
குடி வந்தது ஒரு குடும்பம்

வந்த நாள் முதல் 
கதவுகளும் ஜன்னல்களும் 
மூடப்பட்டே இருந்தன

எதிர்வீட்டு பையன் பாபு 
சைக்கிளில் விழுந்து 
காலுடைந்தபோதும் 

கடைசி வீடு 
மாரி வாத்தியார் 
மாரடைப்பால் 
போன போதும் 

கூரை வீட்டு லட்சுமி 
பனிக்குடமுடைந்து
தலைப்பிரசவத்திற்கு 
ஓலமிட்ட போதும் 

கதவுகளும் ஜன்னல்களும் 
மூடியே இருந்தன

அந்த வீட்டு கிழவி 
செத்தபோது மட்டும் 
தெருவே அங்கு போய் 
ஓவென 
அழுதுவிட்டு வந்தது...............