18.6.13

சித்தப்பாக்கள்



அப்பாக்களின் எதிர் வடிவமே 
சித்தப்பாக்கள் 

அப்பா அமைதி என்றால் 
சித்தப்பா லொட லொட 

அப்பா கோபக்காரர் என்றால் 
சித்தப்பா கருணா மூர்த்தி 

அப்பா சூரியன் என்றால் 
சித்தப்பா நிலா 

பரிந்து பேசுவதிலும் 

அன்பை வெளிக்காட்டுவதிலும் 

எதை கேட்டாலும் வாங்கித்தருவதிலும் 

உற்சாகப்படுத்துவதிலும் 

தன்  உடைமைகளைத் தருவதிலும்

சித்தப்பாக்கள் இதயத்தில் நீங்காவிடம் 
பெற்றுவிடுகிறார்கள் 

அப்பாக்களும் யாரோ ஒருவருக்கு
சித்தப்பாவாய் 
இருக்கக்கூடும் 

சித்தப்பாக்களும் யாரோ ஒருவருக்கு 
அப்பாவாய் இருக்கக்கூடும் ........

16.6.13

முதற்காதல்



உன் பெயர் சுமந்த
வாகனம் செல்லும்போது 

உன் பெயருடைய குழந்தையை
யாரோ அழைக்கும் பொழுது 

உனக்கு பிடித்த பாடல்
ஒலிக்கும்போது 

ஆகாய நிறத்தில் அபூர்வமாக 
யாரவது தாவணி உடுத்தி செல்லும்போது 

ஆண்ட்ரியாவை திரையில்
பார்க்கும்பொழுது 

பேர் அண்ட் லவ்லியும் பாண்ட்ஸ் பவுடரும் 
சேர்ந்த வாசம் நுகரும்பொழுது 

தெற்றுப்பல் பெண்களை 
காணும் பொழுது 

டிஸ்கோ செயினில் மீன் டாலர் 
அணிந்த பெண்ணை 
கடக்கும் பொழுது 

சிவப்பு நிற பிஎஸ்ஏ சைக்கிள் 
செல்லும் பொழுது  

இதயத்தில் ஆசனமிட்டு 
அமர்ந்து நகர மறுக்கிறது 
மறக்கவியலா நினைவுகள் 

முதற்காதலின்  தோல்விதான் 
சுகமான சுமையாக 
இருக்கிறதெனக்கு ...........



7.5.13

இந்த நொடியில்




இந்த நொடியில் 

எங்கோ ஒரு உயிர் கபால மோட்சம் 
அடைந்திருக்கும் 

எங்கோ ஒரு உயிர் தொப்புள் கொடி அறுபட்டு
விழித்திருக்கும் 

எங்கோ ஒரு காதல் இதயம் ரணமாக 
பிரிந்திருக்கும் 

எங்கோ ஒரு காதல் பட்டாம்பூச்சியாய்  சிறகடித்து  
பறந்திருக்கும்  

எங்கோ ஒரு தற்கொலை கடனால் 
நிகழ்ந்திருக்கும் 

எங்கோ ஒரு வருமான வரித்துறையின் சோதனை 
நடந்திருக்கும் 

எங்கோ ஒரு முதிர்கன்னியின் பெருமூச்சு 
உஷ்ணமாகியிருக்கும் 

எங்கோ ஒரு அணு கருமுட்டையை 
துளைத்திருக்கும் 

எங்கோ ஒரு சொறிநாய் 
வண்புணர்ந்திருக்கும் 

எங்கோ ஒரு கொலை முறைகேடால் 
செய்யப்பட்டிருக்கும் 

எங்கோ ஒரு மரம் அரக்க மனதுடன் 
வெட்டபட்டிருக்கும் 

எங்கோ ஒரு விதை மண்ணில் 
விதைக்கப்பட்டிருக்கும்

எங்கோ ஒரு துளி மழை 
தெளிக்கப்பட்டிருக்கும் 

எங்கோ ஒருவரால் இந்த கவிதை 
படிக்கப்பட்டிருக்கும் 

18.2.13

காதல் வர்ணங்கள்


விரல் பற்றி
இறுக அணைத்தபோது 

கண்களில் சூழ்ந்த 
கருமை 

தலையணைக்குள் ஒளித்த 
தாவணி தந்தபோது 
விம்மிய முகத்தின் 
செம்மை 

வழுக்கி விழுந்த காலின் 
சுளுக்கு நீவியபோது 
மின்னலடித்த கொலுசின் 
வெண்மை 

உலர்த்திய துணிகளில் 
என் சட்டைக்கு அருகே 
தொங்கிய உன் ரவிக்கையின் 
பசுமை 

எப்போதணைத்தாலும் 
அணையாத 
உன் பார்வையின் 
நீலம் 

மறக்க நினைத்தாலும் 
மறுநொடியே தோன்றுகிறது 
உன் நினைவுகள் 
வானவில்லாய் .......................

17.2.13

காம சாகரம்


பாவியர் குருதி கலக்கின்றனர்

ரோகியர் மரணிக்கிறார்கள்

போகியர் முத்தெடுக்கின்றனர்

யோகியர் கரையிலமர்ந்து சிரிக்கின்றனர்    

காமக்கடலில்................


அதர விதைகளின் 

முத்தப் பதியன்களால்  

வியர்வை பூக்கள் 

பூக்கிறது ......