எல்லைக்கோடற்ற
கவிஞன் நான்
புல்லின் மீதுறங்கும் பனித்துளி பிடிக்கும்
பெருமழைக்கும் பின் இலை சொட்டும் நீர்த்துளி பிடிக்கும்
யாருமற்றவெளியின் நிசப்தம் பிடிக்கும்
உலகக்கோப்பை வென்ற பேரிரைச்சல் பிடிக்கும்
மலைமுகட்டில் நிற்க பிடிக்கும்
மடு நிரப்பும் சுனையில் கால் நனைக்கப் பிடிக்கும்
துகில் மீறும் நகில் பிடிக்கும்
வெண்பாவும் பிடிக்கும்
பெண்பார்வையும் பிடிக்கும்
சிசுவின் எச்சில் முத்தம் பிடிக்கும்
நரைத்த குழந்தையின் பொக்கைச்சிரிப்பு பிடிக்கும்
காலையில் ரஹ்மானின் ரீதிகௌளை பிடிக்கும்
ராத்திரியில் ராசய்யாவின் சாருகேசி பிடிக்கும்
தலை வியர்க்கும் சித்திரை பிடிக்கும்
தரை உறையும் தை பிடிக்கும்
சித்திரை நிலவிரவு பிடிக்கும்
மழைக்குப்பின் வரும் சுத்த சூரியன் பிடிக்கும்
நைடதம் பிடிக்கும்
நாகூர் ரூமி பிடிக்கும்
கவிப்பேரரசு பிடிக்கும்
கவிக்கோ பிடிக்கும்
நவகோள்களில் செவ்வாய் பிடிக்கும்
வெற்றிலை தரித்த பெண்களின் செவ்வாய் பிடிக்கும்
கடவுளை மனிதராகக் காணப் பிடிக்கும்
மனிதரில் கடவுளைக் கண்டால் பிடிக்கும்
தாயின் காலில் விழப்பிடிக்கும்
தந்தையில் அறிவை தொடப் பிடிக்கும்
பிசிரற்ற ஜெயச்சந்திரன் பிடிக்கும்
மொழி தெரியா சாதனா சர்கம் பிடிக்கும்
உயர்ந்தோரை தலை குனிந்து வணங்கப் பிடிக்கும்
தாழ்ந்தோரை தலை நிமிரச்செய்யப் பிடிக்கும்
ஒத்த அலைவெண் நட்பு பிடிக்கும்
ஒவ்வாதவர்களிடம் விலகப் பிடிக்கும்
மழைக்குமுன் நாசி நிரப்பும் மண் வாசம் பிடிக்கும்
விமானம் வானத்தில் கிழிக்கும் மேகக்கோடு பிடிக்கும்
இலக்கண சங்கிலிகளால்
எனை கட்டிவிட முடியாது
தங்கத்தமிழை மட்டுமே
அணிகலனாய் அணிவேன்
ஏனென்றால்
எல்லைக்கோடற்ற
கவிஞன் நான்...........................................
1 comment:
அருமை...
Post a Comment