பெட்டிக்கடை ஐந்து பைசா
எலந்த வடை
மூணாங்கிளாசில் அனு தந்த
கொடுக்காப்புளி
ஐஸ்மணி கன்னம் கிள்ளி தரும்
சேமியா ஐஸ்
வாய் மணக்கும்
சூட மிட்டாய்
சாலிடரில் பார்த்த
ஒலியும் ஒளியும்
நேஷனல் பேனாசோனிக்கில் கரைந்த
இது ஒரு பொன் மாலைப்பொழுது
பதினெட்டு பொக்கிஷமடங்கிய
TDK- 90
தெரு அதிர்ந்த
பானை ஸ்பீக்கர்
இளமைக்கால கனவு ஹீரோ
இரும்புக்கை மாயாவி
விறகடுப்பில் சமைத்த
வெண்பொங்கல்
மின்வெட்டின் ஆபத்பாந்தவன்
சிம்னி விளக்கு
தென்றல் தவழும்
பனையோலை விசிறி
நிழற்படம் கற்ற
Yashika - Electro 35
பத்திரப்படுத்திய அன்பு
பொங்கல் வாழ்த்து
பரவச நிலை தரும்
தியேட்டர் முன்பெஞ்சு
கரை தொடும்
காவிரி
இரைச்சல் இல்லா
மண் சாலை
கெமிக்கல் கற்பூரமில்லா
கருவறை
உன்னால் அழகான
தாவணி
இறந்த அன்று மட்டும்
அப்பாவை எழுப்பாத
டைம் பீஸ்
திரும்பக்கிடைக்குமா ......................................
விதையின் தாய்ப்பால்
சிப்பிக்கு முத்து
இயற்கையின் சட்ஜமம்
மரங்களின் தலைதுவட்டல்
நீர்நிலைகளின் சக உதிரம்
இலைகளின் குருப்பு
கடவுளின் எச்சில்
கிணற்றின் கொப்பூழ்
இயற்கையின் துப்புரவு
குழந்தைகளுக்கு அனிச்சை ஆச்சர்யம்
காதலர்க்கு மெல்லிசைக்காமம்
மயிலுக்கு துணை கவர்தல்
தவளைக்கு சங்கீத மேடை
முதிர்கன்னிக்கு பெருமூச்சு
விவசாயிக்கு வைப்பு நிதி
நடை பாதை வியாபாரிக்கு சனியன்
இயற்கை சிதைவால்
பருவம் வந்தும்
பூப்படையா மழை
தன்னை மட்டுமே உண்ணும்
சாதக பட்சிகளை
தேடிக்கொண்டிருக்கிறது
மழைத்துளி
விஜய்
எல்லைக்கோடற்ற
கவிஞன் நான்
புல்லின் மீதுறங்கும் பனித்துளி பிடிக்கும்
பெருமழைக்கும் பின் இலை சொட்டும் நீர்த்துளி பிடிக்கும்
யாருமற்றவெளியின் நிசப்தம் பிடிக்கும்
உலகக்கோப்பை வென்ற பேரிரைச்சல் பிடிக்கும்
மலைமுகட்டில் நிற்க பிடிக்கும்
மடு நிரப்பும் சுனையில் கால் நனைக்கப் பிடிக்கும்
காதலியின் நகக்கண் ஓர அழுக்கு பிடிக்கும்
துகில் மீறும் நகில் பிடிக்கும்
வெண்பாவும் பிடிக்கும்
பெண்பார்வையும் பிடிக்கும்
சிசுவின் எச்சில் முத்தம் பிடிக்கும்
நரைத்த குழந்தையின் பொக்கைச்சிரிப்பு பிடிக்கும்
காலையில் ரஹ்மானின் ரீதிகௌளை பிடிக்கும்
ராத்திரியில் ராசய்யாவின் சாருகேசி பிடிக்கும்
தலை வியர்க்கும் சித்திரை பிடிக்கும்
தரை உறையும் தை பிடிக்கும்
சித்திரை நிலவிரவு பிடிக்கும்
மழைக்குப்பின் வரும் சுத்த சூரியன் பிடிக்கும்
நைடதம் பிடிக்கும்
நாகூர் ரூமி பிடிக்கும்
கவிப்பேரரசு பிடிக்கும்
கவிக்கோ பிடிக்கும்
நவகோள்களில் செவ்வாய் பிடிக்கும்
வெற்றிலை தரித்த பெண்களின் செவ்வாய் பிடிக்கும்
கடவுளை மனிதராகக் காணப் பிடிக்கும்
மனிதரில் கடவுளைக் கண்டால் பிடிக்கும்
தாயின் காலில் விழப்பிடிக்கும்
தந்தையில் அறிவை தொடப் பிடிக்கும்
பிசிரற்ற ஜெயச்சந்திரன் பிடிக்கும்
மொழி தெரியா சாதனா சர்கம் பிடிக்கும்
உயர்ந்தோரை தலை குனிந்து வணங்கப் பிடிக்கும்
தாழ்ந்தோரை தலை நிமிரச்செய்யப் பிடிக்கும்
ஒத்த அலைவெண் நட்பு பிடிக்கும்
ஒவ்வாதவர்களிடம் விலகப் பிடிக்கும்
மழைக்குமுன் நாசி நிரப்பும் மண் வாசம் பிடிக்கும்
விமானம் வானத்தில் கிழிக்கும் மேகக்கோடு பிடிக்கும்
இலக்கண சங்கிலிகளால்
எனை கட்டிவிட முடியாது
தங்கத்தமிழை மட்டுமே
அணிகலனாய் அணிவேன்
ஏனென்றால்
எல்லைக்கோடற்ற
கவிஞன் நான்...........................................
ஞாபக ஒட்டடைகளை
சற்றே விலக்கிப் பார்த்தால்
நீ மட்டுமே தெரிகிறாய்
கருவிழிக்குள் நூறு
கவிதைக்கான கரு
நாசிக்கை எழுதி வாங்கும்
நாசி
ரோஜாவின் உதிரமொத்த
அதரம்
கருப்பையொத்த காதுகளில்
ஜிமிக்கி குழந்தைகள்
திருஷ்டி போட்டு
வைக்கும் கன்னக்குழி
வெண்பஞ்சு பாதம் தாங்கும்
முத்துக்கொலுசு
ஓரக்கண்ணால் பார்த்து
இதழோரம் புன்முறுவாய்
பெண்மையின் துல்லிய
சுகந்தத்துடன் எனைக் கடப்பாய்
ஆறு பௌர்ணமிகளில்
தொலைந்த நிலவே
எங்கு இருக்கிறதோ
உன் வானம்.........................
பெருவளியை
ஈரம் தடவி
வாடையாக்கு
தாழ்வுக்கதவின்
தாழ்
திற
எள்ளல்களை
மதியாது
மிதி
நாசியில்
நம்பிக்கை
சுவாசி
லட்சியத்தை
பிரபஞ்சத்தில்
கல
உதிரத்தில்
உழைப்பு குளோபின்
சேர்
வீழ்வை
எழுந்து
வாழ்வாக்கு
எண் திசையிலும்
உன் பெயர்
பொறி