31.1.10

செய்தித்தாள்

அதிகாலை தினமென்
துயில் கலைக்கும்
காகித உறவு
 

பிறந்து சேதி தந்து
பின் தொடரும்
ரகசிய நண்பன்


மின்வெட்டின் போது
விசிறியாக 
என் தந்தைக்கு 

பூரி திரட்டி 
அழகாய் பரப்ப 
என் தாய்க்கு

கத்திக்கப்பலாக   
காற்றாடியாக  

என்  குழந்தைக்கு 
 

பீரோ துணிக்கடியில்
சமையலறை அலமாரியில்
 
என் மனைவிக்கு 
 

பயணத்தில் விரிப்பாக
சாப்பாட்டு பொட்டலத்தின் அணைப்பாக
கொழுப்புறிஞ்சியாக  

எனக்கு

மரணித்தும் உயிர்க்கிறாய்
பட்டாசு காகிதங்களாய் 


26.1.10

விளிம்பு நிலை




புற ஊனம்

கருமை மட்டுமறியும்
இருட்டு விழிகள் 

முற்றிய மூங்கிலே 
மூன்றாம் காலாய்

அண்டச்சத்தமறியா
அரவச்செவி

தட்டேந்தும் குழந்தையின் 
அதிர்ஷ்ட ஆறுவிரல்கள்

ஒருவேளை பழகி மரத்த 
நா நுகர் மொட்டுகள் 

பசுமை புரட்சியின் 
பாசிச பதிப்பு பாதி 

உச்....... உச்சோ  
அனுதாபமோ 
அறவே வேண்டாம் 
இயன்ற பொருளில் 
ஈவோம் சிறிதளவாவது 
அவர்களும் வாழ ..................


அக ஊனம் 

ஆண்மை கொழுத்தவனுக்கு VD
பணம் பெருத்தவனுக்கு ED

இருட்டில் இடம்மாறும் 
இலவச நோவுகள் 

சாகடிக்கும்  தீயாய் 
மனுதர்மப் பகடிகள் 

உருவமில்லா இறைவனுக்கு 
இடிபாட்டில் வழிபாடு 

புதிது புதிதாய் முளைக்கும் கோவில்கள் 
ஒருவேளை தீபமேற்றா 9ம் நூற்றாண்டு கோவில் 

திகம்பர சாமியார்கள் 
அகப்படும் சாமானியர்கள் 

உயர்குதி காலணிகள் 
பெருகும் கருப்பை கோளாறுகள் 

சாவின் நுனியிலொருவன்

செல்போனில் சல்லாபம் 

இரண்டு வயதிலேயே அபாகஸ் 
வளரும் டிஸ்லெக்சியா 

மரபணு மாற்றிய விதைகள் 
நிலம் விற்கும் மகசூல் 

கலாச்சார சீரழிவால் என் 
கண்ணில் சொட்டு நீர்ப்பாசனம்


(நாளைய எனது பிறந்தநாளை {27.01.2010}  முந்திய கவிதை)




12.1.10

கல்வி கவிச்சை



சோளக்காடுகளில்  முளைத்த 
காங்கிரீட் சதுரக்கேடுகள் 

சிறகுகளின் சிரசில் 
கல்விப்பூசணி 

முதுகு வளைக்கும் 
பாட பாரங்கள் 

பால்குடி மறக்குமுன் 
அஜீரண கவிச்சைகள் 

கத்தைப்பண சுற்றால்
காது தொடாமலனுமதி 

பெற்றோர் பாசமற்று
பிள்ளை வளர்க்கும் ஊட்டி

பணந்தின்னி பள்ளிகள் முன் 
ஆங்கில பித்தால் 
இரையான எறும்புக்கூட்டங்கள்

இயந்திர திறவுகளால்
அரக்கிடப்பட்ட கற்பனைகள் 

விழுதுகளின் வேரில் 
திராவகமூற்றி 
விருட்ஷம் வளர்க்கும் 
செப்படி வித்தை 

விளையாட்டுகள் மறைந்து 
வளரும் ஜுவனைல் டயபடீஸ் 

தடித்த நியுரான்களின் 
மடித்த இடைவெளியில் 
மரித்த ஹாஸ்யங்கள் 

அறிவு பெருக்கி 
உறவு சுருக்கும் 
உன்மத்த உபதேசங்கள் 

ஆகாத கல்வியால் 
ஆண்டுகள் வளர 
ஆதரவற்றோர்
ஆயிரக்கணக்கில் 

ஒழிக மெக்காலே 

அனைவருக்கும் எனது இதயங்கனிந்த 
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் 


3.1.10

அஃறிணை




பலகோடி நுகர் செல்லுடைய 
ஞமலியின் இருட்டில் ஒளிரும் நீலக்கண்கள்

கரு சுமக்கும்
ஆண் கடற்குதிரை

முட்டையிட்டு வெண்சாரூட்டும்
நீர்வாழ் பிளாடிபஸ்

உறவியின் சிலிகான் கோர்களுணரும்
ஐப்பசி அடர்மழை

பாம்புத்தச்சன் அமைவிடத்தில்
மிகுநீர் நிலமடியில்

செவியற்ற அரவத்தின்
அதிர் சுனாமி அறிவு

மனித புணர்ச்சியின்
ஒரே பிரதி போனோபோ

தங்க கயலின்
மூன்று நொடி சிந்தனை

எலி சோதிக்கும்
மானுட மருந்துகள்

அஃறிணைகள் அனைத்தும்
அண்டதிற்க்குதவியாய்
ஆறறிவு நாம் ??......................