6.12.14

வாஸ்து

My New Website for Vastu Consultancy

vastuvijay.in


2.11.14

குட்டிக்கவிதைகள் -5


நீ அழுது
உன் தாய் சிரித்த
ஒரே நிமிடம்
உன் தொப்புள் கொடி
அறுபட்ட நொடிதான்..........

மகரந்த தூள்களை
சேகரிக்கும்
பட்டாம்பூச்சி போல
உன் நினைவுகளை
சேகரிக்கிறேன்
காதல் கவிதை  சூலுற........ 

5.9.14

திரும்பக் கிடைக்குமா.........பெட்டிக்கடை ஐந்து பைசா 
எலந்த வடை 

மூணாங்கிளாசில் அனு தந்த 
கொடுக்காப்புளி 

ஐஸ்மணி கன்னம் கிள்ளி  தரும் 
சேமியா ஐஸ் 

வாய் மணக்கும் 
சூட மிட்டாய் 

சாலிடரில் பார்த்த 
ஒலியும் ஒளியும் 

நேஷனல் பேனாசோனிக்கில் கரைந்த 
இது ஒரு பொன் மாலைப்பொழுது   

பதினெட்டு பொக்கிஷமடங்கிய 
TDK- 90

தெரு அதிர்ந்த 
பானை ஸ்பீக்கர் 

இளமைக்கால கனவு ஹீரோ 
இரும்புக்கை மாயாவி 

விறகடுப்பில் சமைத்த 
வெண்பொங்கல் 

மின்வெட்டின் ஆபத்பாந்தவன் 
சிம்னி விளக்கு 

தென்றல் தவழும் 
பனையோலை விசிறி 

நிழற்படம் கற்ற 
Yashika - Electro 35

பத்திரப்படுத்திய அன்பு 
பொங்கல் வாழ்த்து 

பரவச நிலை தரும் 
தியேட்டர் முன்பெஞ்சு 

கரை தொடும் 
காவிரி 

இரைச்சல் இல்லா
மண் சாலை 

கெமிக்கல் கற்பூரமில்லா 
கருவறை 

உன்னால் அழகான 
தாவணி 

இறந்த அன்று மட்டும் 
அப்பாவை எழுப்பாத 
டைம் பீஸ் 

திரும்பக்கிடைக்குமா ...................................... 

22.8.14

என்ன சொல்லி விழுகிறது மழைத்துளி
விதையின் தாய்ப்பால்

சிப்பிக்கு முத்து

இயற்கையின் சட்ஜமம்

மரங்களின்  தலைதுவட்டல்

நீர்நிலைகளின் சக உதிரம்

இலைகளின் குருப்பு

கடவுளின் எச்சில் 

கிணற்றின் கொப்பூழ்

இயற்கையின் துப்புரவு


குழந்தைகளுக்கு அனிச்சை ஆச்சர்யம்

காதலர்க்கு மெல்லிசைக்காமம்

மயிலுக்கு துணை கவர்தல்

தவளைக்கு சங்கீத மேடை

முதிர்கன்னிக்கு பெருமூச்சு

விவசாயிக்கு வைப்பு நிதி

நடை பாதை வியாபாரிக்கு சனியன்


இயற்கை சிதைவால்

பருவம் வந்தும்

பூப்படையா மழை


தன்னை மட்டுமே உண்ணும்

சாதக பட்சிகளை

தேடிக்கொண்டிருக்கிறது

மழைத்துளி


விஜய்
16.8.14

பிடிக்கும்............


எல்லைக்கோடற்ற
கவிஞன் நான்

புல்லின் மீதுறங்கும் பனித்துளி பிடிக்கும்
பெருமழைக்கும் பின் இலை சொட்டும் நீர்த்துளி பிடிக்கும்

யாருமற்றவெளியின் நிசப்தம் பிடிக்கும்
உலகக்கோப்பை வென்ற பேரிரைச்சல் பிடிக்கும்

மலைமுகட்டில் நிற்க பிடிக்கும்
மடு நிரப்பும் சுனையில் கால் நனைக்கப்   பிடிக்கும்

காதலியின் நகக்கண் ஓர அழுக்கு பிடிக்கும்
துகில் மீறும் நகில்  பிடிக்கும்

வெண்பாவும் பிடிக்கும்
பெண்பார்வையும் பிடிக்கும்

சிசுவின் எச்சில் முத்தம் பிடிக்கும்
நரைத்த குழந்தையின் பொக்கைச்சிரிப்பு  பிடிக்கும்

காலையில் ரஹ்மானின் ரீதிகௌளை பிடிக்கும்
ராத்திரியில் ராசய்யாவின் சாருகேசி பிடிக்கும்

தலை வியர்க்கும் சித்திரை பிடிக்கும்
தரை உறையும் தை பிடிக்கும்

சித்திரை நிலவிரவு பிடிக்கும்
மழைக்குப்பின் வரும் சுத்த சூரியன் பிடிக்கும்

நைடதம் பிடிக்கும்
நாகூர் ரூமி பிடிக்கும்

கவிப்பேரரசு பிடிக்கும்
கவிக்கோ பிடிக்கும்

நவகோள்களில் செவ்வாய் பிடிக்கும்
வெற்றிலை தரித்த பெண்களின் செவ்வாய் பிடிக்கும்

கடவுளை மனிதராகக் காணப் பிடிக்கும்
மனிதரில் கடவுளைக் கண்டால் பிடிக்கும்

தாயின் காலில் விழப்பிடிக்கும்
தந்தையில் அறிவை தொடப்  பிடிக்கும்

பிசிரற்ற ஜெயச்சந்திரன் பிடிக்கும்
மொழி தெரியா சாதனா சர்கம் பிடிக்கும்

உயர்ந்தோரை தலை குனிந்து வணங்கப் பிடிக்கும்
தாழ்ந்தோரை தலை நிமிரச்செய்யப்  பிடிக்கும்

ஒத்த அலைவெண் நட்பு பிடிக்கும்
ஒவ்வாதவர்களிடம் விலகப் பிடிக்கும் 

மழைக்குமுன் நாசி நிரப்பும் மண் வாசம் பிடிக்கும்
விமானம் வானத்தில் கிழிக்கும் மேகக்கோடு பிடிக்கும்

இலக்கண சங்கிலிகளால்
எனை கட்டிவிட முடியாது

தங்கத்தமிழை மட்டுமே
அணிகலனாய் அணிவேன்

ஏனென்றால்

எல்லைக்கோடற்ற
கவிஞன் நான்...........................................

8.8.14

பெயரற்றவள்ஞாபக ஒட்டடைகளை 
சற்றே விலக்கிப் பார்த்தால் 
நீ மட்டுமே தெரிகிறாய் 

கருவிழிக்குள் நூறு 
கவிதைக்கான கரு 

நாசிக்கை எழுதி வாங்கும் 
நாசி 

ரோஜாவின் உதிரமொத்த 
அதரம் 

கருப்பையொத்த காதுகளில் 
ஜிமிக்கி குழந்தைகள் 

திருஷ்டி போட்டு 
வைக்கும் கன்னக்குழி 

வெண்பஞ்சு பாதம் தாங்கும் 
முத்துக்கொலுசு 

ஓரக்கண்ணால் பார்த்து 
இதழோரம் புன்முறுவாய் 

பெண்மையின் துல்லிய 
சுகந்தத்துடன் எனைக் கடப்பாய் 

ஆறு பௌர்ணமிகளில் 
தொலைந்த நிலவே 

எங்கு இருக்கிறதோ 
உன் வானம்.........................


31.7.14

திறல் மிகுபெருவளியை 
ஈரம் தடவி 
வாடையாக்கு 

தாழ்வுக்கதவின் 
தாழ் 
திற  

எள்ளல்களை 
மதியாது 
மிதி 

நாசியில் 
நம்பிக்கை 
சுவாசி 

லட்சியத்தை 
பிரபஞ்சத்தில் 
கல 

உதிரத்தில் 
உழைப்பு குளோபின் 
சேர் 

வீழ்வை 
எழுந்து 
வாழ்வாக்கு 

எண் திசையிலும் 
உன் பெயர் 
பொறி 

18.7.14


என்னவளே 
**************

ஒற்றை பார்வையில் 
நானெனும் 
அகந்தை அழிந்ததடி 

ஒற்றை வார்த்தையில் 
செவிகள் 
சொர்க்கம் கண்டதடி 

ஒற்றை மூக்குத்தி 
மின்னலில் 
காவியம் பேசுதடி 

ஒற்றை விரல் ஸ்பரிசத்தில்
மூலாதாரம் 
முளைத்து  விழித்ததடி  

ஒற்றை முத்தத்தில் 
கண்மூடி 
காற்றில் கரைந்தேனடி 

ஒற்றை பூவாய் 
நீ வருகையில் 
பூந்தோட்டம் 
உன்னை தொடருமடி

ஒற்றை "ழ" கரமாய் 
நீ பேச 
தமிழ் 
உன்னை சுமக்குமடி ................................
  

11.5.14

யாய்அன்பு சமைத்து 

ஆசி பெருக்கி 

இதயம் பிழிந்து 

ஈரம் சொரிந்து 

உயிர் வருத்தி 

ஊண் அளித்து

எளிமை பழகி 

ஏசுதல் அற்று 

ஐயம் களைந்து

ஒற்றுமை விதைத்து 

ஓதுதல் உரைத்து 

ஒளடதம் தந்து 

எஃகென காப்பவளே 

அன்னை ...................................

கண்ணீரால் கால்கழுவி 
வணங்குவோம் ................ 

7.5.14

சாரல்


கார்மேகம் 
நிறைசூலுடன்
செஞ்சாமாருதம் வீச 
வருணன் 
பூமியை 
துலக்கிக்கொண்டு 
இருக்கிறான் ................

26.4.14

காதல் மைஇதய வெற்றிடத் தாளில்
உன் பெயரை 
நீலக்கண்ணீரில் 
நனைக்கிறேன் 
கவிதைகளாய் ..............

28.3.14

நிர்மலம்சுவாதி முத்து 

மகரந்தத்தேன்

கறந்த பால் 

பௌர்ணமி நிலவு 

தாய்ப்பால் 

பனித்துளி 

சுத்த ஷட்ஜமம் 

ஓங்காரம் 

தமிழ் ...........

........................

பரிசுத்த பட்டியலில் 

தாயின் அன்பிற்கு 

இணையாக 

எதுவுமே இல்லை.................

12.3.14

நீயே நான்தடயவியல் பொடிகளை 
தூவினால் தெரியும் என்னுடல் 
முழுக்க உன் ரேகைகள் 

மெம் டிஎன்ஏக்களில் உனது 
மூலக்கூறு முளைக்கும் 

பிளேட்லெட்டுகளில் உன் 
பெயர் தெரியும் 

கண்ணிமை மூடினாலும் 
கருவிழிக்குள் நீ இருப்பாய் 

ஆக்சிஜனும் மணக்கும் 
உன் சுகந்தத்தால் 

கவிதைக்கு கருவாய் 
சிலிர்ப்பிற்க்கு ஸ்பரிசமாய் 
புன்னகைக்கு பொருளாய் 
உணவிற்கு சுவையாய் 
உணர்விற்கு உயிராய் 

எல்லாமும் நீயே 

நீயே தான் நான் .......................

1.3.14

கையறு நிலைமிராஸ்தாராக  இருந்து நொடித்து 
மளிகைக்கடையில் கணக்கு எழுதுபவர்கள் 

கடைவீதியில் கைக்குழந்தையோடு 
காதலியை கண்டவர்கள் 

நெருங்கியவர்களின் மரண நொடியில் 
கைபிடித்தவர்கள் 

உயிராக எண்ணிய நண்பனின் 
துரோகத்தை தாங்கியவர்கள் 

வாரக்கடைசியில் வெறும் பாக்கெட்டுடன் 
மகளுக்கு கிண்டர்ஜாய் வாங்க இயலாதவர்கள் 

உலகமென எண்ணிய மகள் காதலால் 
ஓடியதால் உளம் நொந்தவர்கள் 

மேற்கண்ட ஏதாவது ஒன்றில் 
நீங்கள் இருந்தால் 

நீங்கள் எல்லாம் 
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ..........................

26.2.14

நம்பிக்கை


கடந்த காலம் கலங்கிப் போயிருந்தாலும் 

நிகழ்காலம் வறண்டு போனாலும் 

எதிர்காலம் எப்பொழுதும் 

தெளிந்த நீராகவேதான்  இருக்கிறது .............................
  

18.1.14

ரோஜா மலர்


நீயும் ரோஜாவும் 
இரட்டைக்குழந்தைகள் 

காதலை சொன்னபோது 
அவளைப்போலவே சிவந்தாய் 

வியர்த்தபொழுது 
அவளின் சுகந்தம் 

அணைத்தபோது முட்களாய் 
குத்தியது பூனைமுடிகள்

முத்தமிட்டபோது 
மார்கழி காலையில் 
பறித்தது போல் 
முத்து முத்தாய் 
முகத்தில் பனித்துளிகள் 

உன்னுள் புதைகிறேன் 
என்னையும் சிவக்க வை..........  

2.1.14

கவிதைகளிரண்டு - 5


1)

என் இதயமெழுதிய
கவிதையை விட 
உன் இதழெழுதிய 
கவிதையே அழகடி ..............


2)

நிலவு உமிழ்ந்த 
எச்சிலா நட்சத்திரங்கள் ?
என்று கவிதையாய் கேட்ட 
தீக்க்ஷாகுட்டியே
ஓர் கவிதைதானே !!!..........