30.10.09

முற்காதல்உன் 
விழி மின்கசிவு 
இதயத்தீவிபத்து 


கன்னக்கோலக்குழி 
ஆண்மை உறையும் கூடு 


நகமிடுக்கு கருந்துகள் 
புனர்ஜென்ம மருந்தமுதம் 


நாசி வளைகோடுகள் 
ஆயுளின் அட்ச தீர்க்க ரேகைகள்


கருப்பை வடிவக் காதுமடல்
புரளுமிறு மயிர்களில்
உயிரின் ஊசல் 


காமம் மெய்த்தபின் 
காதல் பொய்க்கும் 


உதட்டு சுழியில் 
உன்மத்தம் பிடித்து 
துளி இதழ் விடமருந்தி 
பொய்ப்பது எந்நேரம்........................
27.10.09

என் லிபி


வெள்ளை மனதின்
கருப்பு ரகசியம்

கோண வாழ்க்கையின்
சதுர வரலாறு

முன் நினைவுகளின்
முடிவுறா பக்கங்கள்

உயிர் கரைத்த காதல்

கவிதை ஒத்திகை   
அகம் சிலிர்த்த நட்பு
புலம் பெயர்ந்த வீடு
திரை மறைவரங்கு
கருமிருட்டு வெண்புகை
மயான மதுநுரை
குரங்குபெடல் குதியாட்டம்
வெட்டிய வகுப்புகள்
கலங்கியதால்
கரைந்த எழுத்துகள்

மரத்தும் மரித்தும் போகாது
மண்ணுள்ளவரை ..................

24.10.09

யுகப்பொறுமைவிதையின்
பொறுமை
விருட்சம்

பூமியின்
பொறுமை
சுழற்சி

ஆழியின்
பொறுமை
அலை

சிந்தனையின்
பொறுமை
புரட்சி

நாட்களின்
பொறுமை
வருடம்

காதலின்
பொறுமை
கவிதை

காமத்தின்
பொறுமை
கடவுள்

உறங்கும்
பொறுமை
இறப்பு

காற்றின்
பொறுமை
தென்றல்   

கல்லின்
பொறுமை
சிற்பம்

தாய்மையின்
பொறுமை
நாம் ..............................................................


22.10.09

சக்கர வண்டிஒரு வயசில
ஆட்டை வித்துஆடுகுதி வண்டி

மூணு வயசில
உங்காத்தா மூக்குத்தி முறிச்சு
மூணு சக்கர வண்டி

பதிமூணு வயசில
நாலு மூட்டை கம்பு வித்து
சைக்கிளு


இருபது வயசில
கடைசிக்காணி வித்தப்ப
மோட்டார் சைக்கிளு

வேலை கிடைச்சு
புதுக்காரு வாங்கின


பொண்டாட்டியும்
புதுவீடும்
கட்டுன


பேத்தியோட வானத்துல
பறந்து அசல்நாட்டுக்கு
போயிட்ட


ஒத்தையாய் தனிச்சிருக்கேன்
சக்கர வண்டியி................................

20.10.09

உறைவீடுவிலை பேசி
 

விற்று முடித்து
 

கத்தைப் பணம் எண்ணி
 

தரகு கமிஷன் தந்து
 

வேகாத வெயிலில்
 

சற்றே இளைப்பாறினேன்
 

விற்ற வீட்டின் நிழலில் .....................................

19.10.09

திருமங்கை


குரோமோசோம்கள் குழம்பிய
குளிர் கருக்கள்


ஹார்மோன் குறைநீட்சியால்
மலராத மொட்டுக்கள்


பிறழ்விந்தால் பிறந்த
கூவாக குயில்கள்


நவதுவாரங்களால் நாம்
அனைவரும் நவமே
அறம் பிளந்து
இகழ்தல் முறையோ


பால் உணவிற்காக
அரக்கர்களின்
பாலுணர்வு தணிக்கும்
அசிங்க அவலங்கள்


அரவாணிகள் என்பது
அரைஞானிகளின்  அறிவு
கலைவாணிகள் என்பது
முற்றுணர்ந்தோர் மூச்சு


சரிவிகித சமன்பாட்டில்
ஒருவிகிதமாவது தருவோம்


நஞ்சற்ற நங்கைகளுக்கு
நேசக்கரம் நீட்டுவோம் 

16.10.09

காதல் குவாண்டம் - 1

மாமிசப்பட்சி தாவரம் நீ
 

சிக்கிய வட்டப்புழு நான்
 

மெலிந்த இசையில்
 

சூரியவிழிப்பிற்கு முன்
 

கள்ளுறவு கொண்டோம்
 

என் நிதியிருப்பு அளந்து
 

எதிர் போர் உன்பக்கம்
 

மூளையின் பேசும்பகுதி உறைந்தது
 

பிரிந்தோம் நாம் மணற்துகள்களாய்

Happy Diwali


எனது நெஞ்சார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் எனது இரு கவிதைகளின் தீபாவளி வாழ்த்துக்கள்.

15.10.09

காதல் குவாண்டம்
வீனஸ் ப்ப்ளை ட்ட்ராப்பாய்   நீ


நேமடோட்ஸ் ஆக நான்


டயடோனிக் ஸ்கேல் மிதந்தபொழுது


கோதூளி லக்னத்தில் கலந்தோம்


கால சர்ப்பமாய்


பி இ ரேஷியோ பார்த்து


சிசிலியன் விளையாடி தோற்றோம்


வெர்னிக்ஸ் ஏரியா மரத்தது


உடைந்தோம் குவாட்கோர் சில்லுகளாய்

12.10.09

பிறவா மகள்ஏன் பிறக்கவில்லை மகளே ?

பிஞ்சு பாதம் தாங்கி
உன்னில் கடவுளை காணவும்

பார்பியுடன் நீ தூங்க
நான் தூங்காது உன்னை ரசிக்கவும்

பள்ளி அனுப்பி
பரிதவித்து காத்திருக்கவும்

சொந்தம் கூட்டி பூப்புநீராட்டி
மனம் கர்விக்கவும்

குருவியாய் அலைந்து
குண்டுமணிகளாய் பொன் சேர்த்து
புக்ககம் அனுப்பி
புவியதிர விம்மவும்

தலைப்ரசவத்தில் என்னுருவில்
பெயரனை காணவும்

என் மூச்சுதிரும் வேளையில்
உவந்து உன் உச்சி மோறவும்

என்னுள் வெளிவராதுறைந்த
என் மகளே

மறுசென்மத்தாயாய் வா

காத்திருக்கிறேன் ........................................


7.10.09

அழகின் அலகீடு


அழகு 

புலியின் பதுங்கு பாவனை

யானையின் முன் ஆசி நீட்சி 

நாயின் பின் நன்றி நவிலல் 

பால் குடிக்க பறந்தோடும் கன்று 

தேனீயின் கழிவு 

மண்புழுவின் தாமிரமேனி 

கூவுகுயிலின் சமிக்ஞை 

மருண்ட இருளோட்டிடும் செங்கதிர்

மொட்டைமாடியில் முழுநிலவு 

பசும்வயலில் கிழிசட்டை பூதம் 

நிமிர்ந்த மலையின் ஆரம்

அடர்ந்த காட்டில் மின்மினி

மரித்த பாட்டியின் முகவரிகள்

சிசுவின் தூக்கசிரிப்பு

செயற்கை ஒளி அறுந்தபின் லாந்தர்

கவிதையில் காதல்

என்னவளின் கோண வகிடு

கூடலின் வியர்வை 

கோள்களில் வளையச்சனி

கடவுளில் கந்தன் 

மொழியில் தமிழ்

தமிழில் ஈழம் 

ஈழத்தின் வீரம்


பிரபஞ்ச பிழையான நாம் ....................................
5.10.09

நடுவர்க்க நரகம்நடுவர்க்க நடுக்கடலில் 
நாங்கள் 
இருகரையும் பச்சை 

எதிர் வீடு எல்சிடி 
கண் எரியும்
  
பின்வீட்டு வாஷிங்மெஷின்
மனம் துவையும் 

பண்டிகை கொண்டாட்டங்கள் 
நகைகள் ஹிந்தி படிக்கும் 


ஏங்கி ஏங்கி 
மனசு தூங்கி போகும்

திடீர் செலவு 
திக்கற்ற நிலை 

எண்ணிய பின் சம்பளம் 
எண்ணவே முடியாது 

ஊர் முழுதும் பழக்கம் 
அடிக்கடி மாறிய வீடுகள் 

ஆண்டவா ................................
மறுபிறப்பில் ஏழையாய் அல்லது வளமையாய்
படைத்திடு 

நடுக்கடல் வாழ்க்கை நரகமென்பதால்................ விஜய் @ 98947 60636


3.10.09

நிறமிபச்சை
பசித்த பசுவயல் 
அழித்த நாற்கல்


கருப்பு 
உழைப்பின் உயர்நிறம் 
மணச்சந்தையில் மட்டும் மறுக்கப்படும் 


நீலம்
வானின் பிம்பம் 
ஆழகல ஆழியில் 


சிவப்பு 
வெற்றிலைபாட்டி
விதவைக்கு வெறுநெற்றி


வெண்மை 
தாய்மையின் முதல் திரவம் 
முடிவிலும் ஊற்றப்படும்.