27.12.12

போட்டிக்கு அனுப்பிய பாடல்

நான் படத்தில் தப்பெல்லாம் தப்பே இல்லை பாட்டுக்காக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி போட்டி வைத்திருந்தார். அதற்காக நான் எழுதிய சரணங்கள்.




1)
பாயும் புது ரத்தமிங்கு 
சாயும் பல சிங்கமிங்கு 
உடல்மொழி உருவத்தை உயர்த்திவிடு 

பாடும் கிளி வண்ணச்சிந்து
தேடும் இள நெஞ்சைக்கண்டு 
இலைமறை இதயங்கள் இணைத்துவிடு 

பூக்காடே வாழ்வென்றும் தீக்காடே 
பாரெங்கும் சீக்காடே  
சாகட்டும் சாக்காடே 

தேனூற்றி  மூளைக்குள் தீமூட்டி 
பூமிக்குள் நீரூற்றி
செய்யட்டும் அரசாட்சி ...........

2)
பூமி பல வண்ணப்பந்து
வாநீ புது எண்ணம் சிந்து
விரல்நுனி அசைவினில் சுருக்கிவிடு  
நாளை விடியட்டும் நல்ல
வேளை திசையெட்டும்  வெல்ல
உனதுயிர் உதிரத்தை உசுப்பிவிடு

நானல்ல நானன்றி நீயல்ல 
நீயன்றி நானல்ல 
நாமன்றி வேறல்ல 

காம்பல்ல பூவுக்குள் தேனல்ல
கீழோடும் வேரல்ல
வித்தன்றி வாழ்வேது ............

26.12.12

ஆறாம் விரல்


ஜனித்த நாள்முதல் தனது ஆறாம் விரலாய் என்னை இணைத்து
மரிக்கும் நொடி  வரை எனக்கு ஏழாம் அறிவை போதித்த
அயோத்யா ராமனாகவும்
துவாரகை கிருஷ்ணனாகவும்
விளங்கிய
எனது ஆருயிர் தந்தைக்கு
இந்த நூறாவது பதிவை
கண்ணீருடன் சமர்ப்பிக்கின்றேன்.

8.6.12

பகல் இரவு



காரிருள் மறைக்கும் நிலவிரவு 


வீசும் காற்றில் கொடியின் 
முந்தானை விலக்கும் கிளைகள் 


அரவமற்ற சாலையில் 
ஆண் நாயின் ஊளை


மின்கம்பியிலமர்ந்த 
கோட்டானின் கொக்கரிப்பு 


பறக்கும் விண்மீனாய் 
மின்மினிகள் 


எங்கோ ஒரு ஈர முனகலும்
ஏக்க பெருமூச்சும் 


நள்ளிரவு நளினங்களை 
துயிலாமல்  ரசித்தேன் 


புலர் பொழுது சூரியனும்


பால்காரனின் மிதிவண்டி மணியும் 


பேப்பர் பையனின் "சார்"  


காய்கறிக்காரியின் "மாங்காய்" 


எதுவும் என்னுள் நுழையாதபடி 


சுகித்துறங்கினேன்


நள்ளிரவின் எச்சங்களை 
சுமந்தபடி........................

26.1.12

சில ஹைகூக்கள் - 1



பட்டாம் பூச்சிகள் 
பள்ளி செல்கின்றன 
சிறகுகள் உதிர்க்க 

உண்டியலில் 
சேர்கிறது
அனுபவியா ஆசைகள் 

பாலுக்கேங்கும் குழந்தையின் 
நாவை நனைக்கும் 
தாயின் கண்ணீர்


பி. கு : எனது பிறந்தநாளான (27.01.2012) இன்று வாழ்த்திய, வாழ்த்திக்கொண்டிருக்கிற, வாழ்த்தப்போகின்ற அனைத்து அன்பு சொந்தங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.