31.10.11

திறக்காத கதவுகள்


அய்யர் பங்களாவுக்கு 
காஞ்சிபுரத்திலிருந்து
குடி வந்தது ஒரு குடும்பம்

வந்த நாள் முதல் 
கதவுகளும் ஜன்னல்களும் 
மூடப்பட்டே இருந்தன

எதிர்வீட்டு பையன் பாபு 
சைக்கிளில் விழுந்து 
காலுடைந்தபோதும் 

கடைசி வீடு 
மாரி வாத்தியார் 
மாரடைப்பால் 
போன போதும் 

கூரை வீட்டு லட்சுமி 
பனிக்குடமுடைந்து
தலைப்பிரசவத்திற்கு 
ஓலமிட்ட போதும் 

கதவுகளும் ஜன்னல்களும் 
மூடியே இருந்தன

அந்த வீட்டு கிழவி 
செத்தபோது மட்டும் 
தெருவே அங்கு போய் 
ஓவென 
அழுதுவிட்டு வந்தது...............