30.9.09

மதம்


அகத்தின் அளவீடு
இனத்தின் குறியீடு
வரலாற்று உள்ளீடு
பூகோள மாறுபாடு

ஓர் இறைவன்
ஓராயிரம் மதங்கள்



கிளைகள் நூறு
வேர் ஒன்று
கிளைகளுக்குள் கிளர்ச்சியேன்



உன் மதத்தால்
உன்மத்தம் பிடித்தால்
அம்மதம் உடன் உதறு



சகரத்த சகோதரனே
சம்ரக்ஷணம் பழகு
சம்ஹாரம்  மற



சமதர்ம சமுதாயமே
நிர்மால்ய நிதர்சனம்




நூறு தலைமுறைக்கு முன்
நீ எந்த மதம் அறிந்து சொல்



சிலுவையும் சீக்கியமும்
அல்லாவும் ஆறுமுகனும்
கை கோர்ப்பதே
தீவிர வியாதிக்கு மருந்து



தன்பசிக்கு பிறர் வயிறு கிழிக்காமல்
தானேரிந்து பிறர்க்கொளிரும்
மெழுகாய் மிளிர்



கார்டெக்ஸ் கழிவுப்பதிவை
விரைந்து வெளியேற்று



இதயம் செலவழி
அன்பை வரவு வை  



மத நல்லிணக்கமே
மனித நல் இலக்கணம்



மதங்களின் வேர்
மண்ணை திங்கட்டும்
மனிதத்தை அல்ல ...................

27.9.09

ஆத்திச்சூடி - 2009


அகமது தெளி 

ஆகமம் மற

இச்சை தவிர் 

ஈகை மிகு 

உளமை உரை

ஊகை பெருக்கு 

எளிமை பழகு 

ஏருழவர் பூசி 

ஐம்புலம் அடக்கு 

ஒடுங்கல் பிழை 

ஓங்காரம் தொழு 

ஒளவை நினை 

எஃகு மனம் கொள்

22.9.09

காதல்



கால் சதங்கை கலத்த நாட்களும் 
கண்ணசைவில் கரைந்த நாட்களும்
கைப்பிடித்து உறைந்த நாட்களும் 
நிலைத்த பசுமை


முன்பகலில் முந்தானை இழுத்ததும் 
நண்பகலில் நகம் சுருக்கியதும் 
கருமிரவில் சொடுக்கெடுத்ததும்
காகிதம் கனக்கும் கவிதைகள் 

நினைவுகள் நிதர்சனம்
நிதம் உன் வலி 


காதலில் வென்று வெறுமையாவதைவிட
தோற்று துவழ்தல் சுகமெனக்கு 
ஏனென்றால்
நொடிக்கொருமுறை உன் நினைவெனக்கு 


அன்று 
உயிர்மெய் கலந்த பொருளாய் 

இன்று 
தாமரை இலை தண்ணீர் போல் நாம்

19.9.09

நட்பூ

தாய் - கருவறைச் சொந்தம் 
தாரம் - இதயப் பந்தம் 
நட்பு - மூளையின் முதல் சந்தம் 

நட்பின் முதல் நகை குறுநகை 


மீசை அரும்புமுன் விதையாகி 
ஆசை நரைத்தபின் விருஷமானது 


முக்கிய துயர்களின் 
முதுகு கிழிக்கும் முள்வேலி 


எவரிடமும் பகிர்ந்திரா இதயக் கீறலை
குமுறி வடித்திட ஓர் வடிகால் 


கொப்பளித்த புண்களில் கொடுந்தீயுற்றாமல்
குளிர்சந்தனம் தடவும் நன்மருத்துவம் 


நட்பின் ஊடல்
சினேகச்செடிக்கு
இயற்கையான  இடுபொருள் 


எனது வெற்றியின் ஆதார சுருதி - ஆனால் 
தோல்வியில் அபஸ்வரக்கருவி இசைப்பதில்லை 


நித்ய சந்திப்புகள் 
நிமிட புதுப்பித்தல்கள் 


நான் உன்னிலும் 
நீ என்னிலும் 
இருப்பதால் 
பரஸ்பர விசாரிப்புகள் 
சம்பிரதாய பகிர்வுகளை
நாம் அனுமதிப்பதில்லை 


மண், வேரின் நட்பு
மரமாகியது 


இடி, மின்னலின் நட்பு
மழையாகியது 

உனது நட்பு 
எனை மனிதனாக்கியது 


ஆண்பாலாகிய நமது நட்பு 
மறு பிறப்பில் 
பெண்பாலாய் தொடரட்டும் .

13.9.09

வென்றெழு

வெந்ததை தின்று விதி வந்ததும் சாகாதே 
சந்ததிக்கு சமைத்து வை 

சிதைந்த சிந்தனைகளை புதை 

நொடிமுள்ளாய் உழைத்து 
இருமுள் போல் வாழ்வை மணியாக்கு

பீனிக்ஸ் போல் இறந்து பிறக்காதே 
மண்புழுவாய் மரித்து உரமாகு

வெற்றி - கனி 
தோல்வி - காய்
காயே  பின் கனியும் 

பெற்றோரை துதி 
கற்றோரை மதி 

காதலி அல்லது 
காதலிக்கபடு 
காதல் தாழ்வு பிறழ்வுகளை 
தகர்த்திடும் அகமருந்து 

அன்பு வளர்த்து 
பகைமை தேய் 

புத்தி செதுக்கி 
வித்தை பெருக்கு

சிறகுகளை மாற்றி போட்டால் 
சிறு குருவிகூட பறக்காது 

மாற்றி யோசிக்காதே 
யோசித்து மாறு 

விழுந்தாலும் வென்றெழு

11.9.09

ஈழம்

கொடுங்கோல் குடிதாங்கிகளின்
கொக்கரிப்பால்
இடிதாங்கிகளாய்   எம்மக்கள்

என் சகரத்த சகோதரர்கள்
குருதி சகதியில் குளித்திருக்க
மானாட மயிலாட பார்ப்பது
மானங்கெட்ட  மனசியலோ

ஈசல் கூட ஈசனை அடைய சில மணித்துளிகள்
மகப்பேறு மாதர்க்கு மகேசனடி சில நொடிகளில்

டாஸ்மார்க்கிற்கு பாஸ்மார்க் போடும் தமிழர்க்கு
ஈழத்தின் மீது மயிரளவும் ஈவு இல்லையே ?

எண்ணற்ற இயற்கை வளம் ஈழத்தில்
மனித எருக்களும் சேர்த்து

புத்தரின் போதனைகள்  ஈரம்
செத்தவனுக்கு புரியுமா ?

இனமே அழிய தமிழகமே
சத்குருவாய் மாறியது எப்போது ?

ஈழ ஓலம் கேட்க மறுத்த காதுகளில்
ஈயத்தை ஊற்றுங்கள்

எம்மவர்களின் சடலங்கள்
உரமாகி ரத்த பூவல்லவா பூக்கும்

பிஞ்சுகளை கூட வேரறுத்த  மா ஈனர்களின்
நெஞ்சறுக்க வழியில்லையே ?

என்றாவது ஒருநாள் தனி ஈழம் அமைத்து சமைத்த செய்தி கேட்கும்
என் நெஞ்சில் தைத்திருக்கும் முள் சற்று கரையும்

வேறு என் செய்வேன் யான் - கையாலாகாத கவி
புனைவதை தவிர ........................................

3.9.09

ஹைக்கூ

அல்பாயுசில் போன
அப்பாவின் ஜாதகம்
மகன் பார்க்கிறான்
ஜாதகருக்கு பூரண ஆயுள் 


ஓட்டலில் டிபன்
மீந்தது சோறு
வேலைக்காரிக்கு   



கண்ணன் 
மடியில் கணினி 
குழந்தை கிரச்சில் 


முத்தம்


உலகின் முதல் பண்டபரிமாறல்


காய்ந்த இதயத்தை ஈரமாக்கும்
இந்திரிய தூண்டல்


உச்சத்தின் ஆரம்பம் உதடுறவே


கண் சுருக்கி காது மடல் வருடி


நாசி விரிந்து தந்தாய் ஒன்று


என்னுள்ளும் மின்சாரம்