31.8.10

கவிதைகளிரண்டு - 1
சிசு 


கருவறை 
நீச்சலறையில்
களித்து குளித்து 
கரைதட்டி 
சிரம் தூக்கியது 
சிசு 
ஆயிரமாயிரம் 
வல்லூறுகள் 
வட்டமடிக்க 
சடக்கென்று 
உள்ளிழுத்து 
வாயிலை மூடியது  


முதிர்கன்னி 


இருட்டறையில் 
ஒழுகும் மெழுகுவர்த்தி
நீளுமிரவுகளில் 
நிலவும் அவளும் 
மட்டும் தனிமையில் 
ஆயிரத்தோரிரவாக     
போர்வைக்கும் புழுங்கும் 
கிளிடோரிஸ் கனவுகள்  27.8.10

நன்றி நன்றி நன்றி


இன்றுடன் வலைப்பக்கம் ஆரம்பித்து ஒரு வருடமாகிறது.


பிரதிபலன் பாராத நட்புகளின் அன்பு என் மனக்குருதி கசிய வைக்கிறது.


பாராட்டுகளால் என்னை சீராட்டி வளர்க்கும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி


விஜய் 


22.8.10

பூப்படையா மழை

சிறார்களின் 
அனிச்சை ஆச்சர்யம் 


ஓவியர்களுக்கு 
செம்மண் காடுகளில் 
வான்துகள்களின்
வண்ணக்கலவை 
எம்பாசிங் 


கவிஞர்க்கு 
இலை நெற்றியில் 
நீர்ப்பொட்டு


தேவமாதுருக உழவர்க்கு 
ருண விமோசன அட்சயம் 


பாடகருக்கு 
சட்ஜமம்
சமைக்கும்
சங்கீதம் 

காதலர்க்கு 
மெல்லிய தூறல் 
மெல்லிசைக்காமம்

நடைபாதை வியாபாரிக்கு 
சனியன் தவளைக்கு 
சங்கீத மேடை 


எறும்புக்கு 
அறைச்சிறை


ஆழ்மட்டம் வற்றியோருக்கு 
ஆனந்த சேமிப்பு 


மழைத்திவலை 
மட்டுமுண்ணும்
சாதகப்பட்சிகள் 
சந்ததியழிந்தது


எச்சத்தின் மிச்ச 
விதைக்கு கொலஸ்ட்ரம்


நகர அழுக்குகள் 
துடைக்கப்பட்டு 
கிராம உள்வாங்கல் 


பக்க வாத்தியம் முழங்க 
பளிச்சென படமெடுக்க 
மண்ணும் மாரியும் 
பகிரங்க நிஷேகம் 


சில்வர் அயோடைட் தூவினால் 
கிட்டுமா இதெல்லாம் ?


ஆனாலும் 
பருவம் பொய்த்தே பெய்கிறது 
பூப்படையா மழை