17.3.11

ஒருமுறை



ஒருமுறை பார்

என் கருவிழிதனில்

நட்சத்திரம் அறி


ஒரு சொல் பகர்

உன் பெயருக்கெழுதும்

என் உயிரின் உயிலை வாசி


ஒருமுறை சிரி

என் சிரசின் பின்

ஒளிவட்டம் காண்


ஒருமுறை அணை

எழும்பு மஜ்ஜையில்

புது அணுக்களின்

உற்பத்தி உணர்


ஒருமுறை முத்தமிடு 

உயிர் பூக்கும்

உன்னத ஓசை கேள்


ஒருமுறை திற 

இதயக்கதவினுள்

நுழைந்து மூடி

மறைந்தே வாழ்வேன் ...........................

22.2.11

காக்ளியாவற்ற கருணம்



நான்கு வழிச்சாலையில் 
பயணித்தேன் 

சில ஊர்கள் 
மறைந்தே போயின 

ஓர தேநீர் கடைகளின் 
சுவடுகள் இல்லை 

வீடுகளின் முதல் மாடி
தரைத்தளமாய்

காடுகளின் தடங்கள்
கரைந்திருந்தது  

பயணம் என்னவோ 
சுகமாய்த்தான்  இருந்தது 

குடிசையிழந்தோரின்
கூக்குரல் மட்டும் கேட்கவே இல்லை 
காக்ளியாவற்ற கருணத்தால்.............


26.1.11

இகபரம்



பிறப்பின் ரகசியம் 
தேடி 
பெருவெளியினுள்
பிரவேசித்தேன் 

அனுஜன்ம அரசனோ 
த்ரிஜென்ம சேவகனோ 
பகுத்துணர முடியவில்லை 

சிறகு முளைத்திறக்கும் 
பரிதாப ஈசலோ 


புல் குடும்ப 
தென்னையோ 


விடம் கொண்ட 
ஈரமில்லா அரவமோ 


பிறவி பெருங்கடலின் 
ஆழம் அறியப்படவில்லை 

திடுக்கிட்டு விழித்தபோது 
பெல்லோபியன் குழல்வழியோடி
ஓட்டத்தில் வென்ற 
கோடியில் ஒருவனென்பது
மட்டும் புரிந்தது.............. 


டிஸ்கி : 27.01.2011 இன்று எனது பிறந்தநாள். 
வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி.



8.1.11

தட்டான்



விராட் பிறங்கடை
அபிவாதனம் 


கழஞ்சு தண்டவாணி 
தாமிரக்குன்றிமணி 
குழைந்துருக்கிய 
மங்கல நாண்


அயத்தின் களங்கு
நீக்கி 
தணலில் தட்டிய 
கொழு


உளி துளைத்து 
துயில் திளைக்க 
தேக்கு சேக்கை


மாந்தக்கோட்டத்தின்
காந்தக்கோட்டை


யாழியின் அண்ணத்தில்
உருளும் கல் 


துரியோதனன் வழுக்கிய 
இந்திர பிரஸ்தம் 


ஆண்டவர்களின் 
ஆயுத கர்த்தாக்கள் 


பெருந்தனக்காரர்களின் 
பிரதேச பிரவேசம்


மயில் துத்தம் 
தீர்த்தமாய் 
மரித்த உயிர்கள் 


காட்மிய புகையில்
நுரையீரல் அரிப்புகள் 
கந்தாரச்சுவையில் 
உப்பிய கணயங்கள்


ஆறறிவு மிஞ்சிய 
அரும்பெரிய சந்ததி 
அடிமை அமீபாவாய் 
ஒடுங்கியது கண்டு 


குஞ்சர மல்லனின் 
பிரமேந்திரக்கல்லில் 
வெந்துளி  கசிகிறது 
கமலாலய தச்சனின் 
ஆரூர்க்குள  நீராய்   







30.12.10

காதலாகு பெயர் 18+


பிரிவு நிசப்தத்தில் 
நினைவுகளின் உரப்பொலி


கொய்சக இடுக்குகளில் 
விரல்களின் தடங்கள்


இதழிட்ட 
முத்தத்தின் 
நளபாகத்தில் 
நடுங்கும் 
பாலிகை ரேகைகள் 


பத்தும் பற்றிய 
பிடரி மயிற்றின் 
வேர் நுனிகளில் 
டோபமைன் சுரப்பு 


அக்குள் வியர்வையில் 
ரவிக்கை நனைய 
அணையா அணங்கு 


கடிகார கடிகையின் 
கைக்கிளை கழல் 


விரக வெந்நீரின்
குழல்வழி பயணம்
குரல்வலியினூடே  


வகிட்டின் வெண்மையில்
சிவப்பாய் எனதுயிர் .........