26.6.11

குட்டிக்கவிதைகள்




எல்லை 

தெருவோரம்
சிறுநீர் கழித்து 
எல்லையறிகிறார்கள்
மாக்கள் 



சாம்பல் 

ஆஷ்ட்ரே 
நிரப்புகிறது 
காதல் 
சாம்பல் 


23.6.11

தனித்திரு



கவிதைஎழுத 
கருப்பொருள் தேடினேன் 

உருவாக்கிய எந்தை

கருவாக்கிய யாய்

திருவாகிய இறை   

தருவுறை வன்னி 

கிட்டவில்லையெதுவும்

உன் மணவாழ்விற்கு   
எருவாகிய எனது காதல்

கொட்டியது 
கண்களில் 
கவிதைகள் 
துளித்துளியாய் .........   

7.6.11

நாணயம்



கோயில் வாசல் 
பார்வையற்றோனின் 
கிழிசல் துண்டில் 
புண்ணியம் தேடும் 
பொய் முகங்கள் 
சிதறிக்கிடக்கின்றன 
நாணயமற்று........

27.5.11

மறுதலி



சூரியன் தன்னிருக்கையை 
நிலவுக்கு தந்த பொழுது 

திவலைகள் தெறித்த வானில் 
விப்கியார் வண்ணம் 

நனைந்த தலையை 
துவட்டி கொண்ட மரங்கள் 

கருத்த மேகங்களின் 
கவன ஈர்ப்பு மாநாடு 

பூக்களின் இதழ்களில் 
முத்து முத்தங்கள் 

இனிமையான 

ஈரமான 

இருமுட்கள் பிரிந்த 
அந்தி நேரத்தில் தான் 

சொன்னாய் 

என்னை பிடிக்கவில்லையென


11.5.11

(ய)(ம)(த)ந்த்ரம்



ஓம் சிம்மி சிம்மி ஸ்வாஹா 
சர்வஜன வசியம் 

அனிமா சித்தி தரும் 
ஏகமுகி ருத்ராக்ஷம் 

ஓஜஸ் வளர்க்கும்
வஜ்ரொலி முத்ரா

கண்ணூறு அழிக்கும் 
காக்ரிசிங்கி தாயத்து 

சிவனார் அருளிய 
யோனி தந்த்ர ரகசியம் 

குலார்ணவ அரசியல்வாதிகளின் 
வாமச தந்திரங்கள் 

பிராணப்ரதிஷ்ட யந்திரங்களும்
ஏரொளிச்சக்கரமருளிய திருமந்திரமும் 

எத்தனை இருப்பினும் 
எவ்வுயிரும் உய்ய 
தாய் எனும் 
ஈரட்சர மகா 
மந்த்ரம்.