26.11.13

சில ஹைகூக்கள் - 4

1)

பிண ஊர்வலத்தின் 
பின்னால் 
எதிர்கால பிணங்கள் 

2)

ஆற்றின்
கொப்பூழாய்
முழு நிலா 

3)


பதினைந்தே நாட்களில்
பூப்பெய்தும்
அம்புலி

14.11.13

கவிதைகளிரண்டு - 3





1)


எனக்கு பிடித்த
எனது கவிதைகள்
எதுவுமேயில்லை 

விதை தூவிக்கொண்டு 
இருக்கிறேன் 
என்றோ முளைத்து
எவ்வாறேனும் பூத்து
என்றைக்காவது கனியும்போது
எனது மற்ற கவிதைகளும் 
எனக்கு பிடித்துப்போகுமென்ற 
நம்பிக்கையில் ,,,,,,,,,,,,,,,,,,, 


2)

தயவு செய்து
நகங்களை வெட்டாதே 
எனது மெய்யில்
அவையிடும் குறிகள்
உனது காமக்கையெழுத்து 

14.10.13

ராஜா ராணி



1)

கவிதையின் 
முதல் வரியிலிருந்து
கடைசி வரிவரை
ஏதாவது இட்டு
நிரப்பினாலும்
அந்த ஏதாவதில்
நீ மட்டுமே
இருக்கிறாய் !!!!


2) 

திசையெட்டும்
கொடி பறந்த
ராஜாவிற்கு
துரித ஸ்கலிதம்

நிலவின்
விசும்பலில்
நீள்கிறது
ராணியின்
இரவுகள்........

30.9.13

நொடிப்பிறழ்வு


நீர் வழிய 

நிறம் வெளிர

உதடுளர 

நாக்குலர 

நாசி வெம்ப 

மெய் நடுங்கும் 

மைதுன வேளையில்

கார்டெக்ஸ் இழையில்  

ஏதோ  ஒரு நொடியில் 

அவரவர் காதலிகள்

வந்து போகக்கூடும் .......

10.9.13

கவிதைகளிரண்டு - 2


1) நட்புக்கும் காதலுக்கும் 

காதலுக்கும் காமத்திற்கும் 

காமத்திற்கும் கடவுளுக்கும் 

மயிரளவுதான் இடைவெளி 

என்றாலும் 

அறுபடுதல்

மிகச்சிரமமாகத்தான் 

இருக்கிறது 


2)
சிலரின் காதலிகள் 
தெய்வமாகிறார்கள்

சிலரின் காதலிகள் 
தாயாகிறார்கள் 

சிலரின் காதலிகள் 
மனைவியாகிறார்கள் 

சிலரின் காதலிகள்
மகளாகிறார்கள் 

சிலரின் காதலிகள் 
மட்டும் 
பெயரற்ற உறவாக
நெஞ்சை பிசைகிறார்கள்