1.3.14

கையறு நிலை



மிராஸ்தாராக  இருந்து நொடித்து 
மளிகைக்கடையில் கணக்கு எழுதுபவர்கள் 

கடைவீதியில் கைக்குழந்தையோடு 
காதலியை கண்டவர்கள் 

நெருங்கியவர்களின் மரண நொடியில் 
கைபிடித்தவர்கள் 

உயிராக எண்ணிய நண்பனின் 
துரோகத்தை தாங்கியவர்கள் 

வாரக்கடைசியில் வெறும் பாக்கெட்டுடன் 
மகளுக்கு கிண்டர்ஜாய் வாங்க இயலாதவர்கள் 

உலகமென எண்ணிய மகள் காதலால் 
ஓடியதால் உளம் நொந்தவர்கள் 

மேற்கண்ட ஏதாவது ஒன்றில் 
நீங்கள் இருந்தால் 

நீங்கள் எல்லாம் 
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் ..........................

26.2.14

நம்பிக்கை


கடந்த காலம் கலங்கிப் போயிருந்தாலும் 

நிகழ்காலம் வறண்டு போனாலும் 

எதிர்காலம் எப்பொழுதும் 

தெளிந்த நீராகவேதான்  இருக்கிறது .............................
  

18.1.14

ரோஜா மலர்


நீயும் ரோஜாவும் 
இரட்டைக்குழந்தைகள் 

காதலை சொன்னபோது 
அவளைப்போலவே சிவந்தாய் 

வியர்த்தபொழுது 
அவளின் சுகந்தம் 

அணைத்தபோது முட்களாய் 
குத்தியது பூனைமுடிகள்

முத்தமிட்டபோது 
மார்கழி காலையில் 
பறித்தது போல் 
முத்து முத்தாய் 
முகத்தில் பனித்துளிகள் 

உன்னுள் புதைகிறேன் 
என்னையும் சிவக்க வை..........  

2.1.14

கவிதைகளிரண்டு - 5


1)

என் இதயமெழுதிய
கவிதையை விட 
உன் இதழெழுதிய 
கவிதையே அழகடி ..............


2)

நிலவு உமிழ்ந்த 
எச்சிலா நட்சத்திரங்கள் ?
என்று கவிதையாய் கேட்ட 
தீக்க்ஷாகுட்டியே
ஓர் கவிதைதானே !!!.......... 

28.12.13

கவிதைகளிரண்டு - 4


1)

நிசப்த முத்தமிட எண்ணி  
இட்டபின் ஒலித்த 
இச்சென்பது  
பிரபஞ்சத்துடன் ஆன்மா 
ஒத்திசைந்த 
இசையாக இருக்கலாம்............


2)

மாமா...
என்றழைத்த 
வர்ஷாக்குட்டியின் 
கண்களில் 
GEMS
தெரிந்தது .................